பாயிரம் – கடவுள் வாழ்த்து – 2


போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை – அனைத்து உயிர்களும் போற்றிப் புகழும், நிலைத்து விளங்கும் தூயவனை

நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளுக்கும், அதாவது பாரபட்சமின்றி அனைவருக்கும் அருளும் அன்னை சக்திக்கும் தலைவனை

மேற்றிசைக்குள் தென் திசைக்கொரு வேந்தனாங் – திசைகளை எட்டாகப் பிரித்து, ஒவ்வொரு திசைக்கும் ஒருவரை தலைவனாகக் கூறுவர். அவை பின் வருமாறு.

கிழக்கு – இந்திரன்
தென்கிழக்கு – அக்னி
தெற்கு – எமன்
தென்மேற்கு – நிருதி
மேற்கு – வருணன்
வடமேற்கு – வாயு
வடக்கு – குபேரன்
வடகிழக்கு – ஈசான்யன்

இவற்றுள் தென் திசையின் வேந்தன் எமன்.

கூற்றுதைத்தானை யான் கூறுகின்றேனே – தன் பக்தனுக்காக காலனையே சம்காரஞ் செய்தவனை நான் வணங்குகின்றேனே.

மார்க்கண்டேயருக்கு பதினாறு வயதில் மரணம் நிகழும் என்பது விதி. ஆனால் காலன் விரட்டி வருகையில் மார்க்கண்டேயன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரிடம் அடைக்கலம் அடைந்தார். இறைவன் காலனை உதைத்து, மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு இளமையையும் அளித்தார்.

இறைவனிடம் தன்னையே அற்பணித்தால் அவர் மரணத்திலிருந்தும் காப்பார்.

This entry was posted in திருமந்திரம் and tagged , , . Bookmark the permalink.

Leave a comment