பாயிரம் – கடவுள் வாழ்த்து – 8


தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்கு
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே

தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் – இறைவன் தீயை விடச் சூடானவன், நீரை விடவும் குளிர்ச்சியானவன். அவனே தீயில் வெம்மையாகவும், நீரில் குளிர்ச்சியாகவும் அவனே அனைத்து உணர்வுகளாகவும் விளங்குகிறான்.

ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை – இறைவன் அனைத்துமாக இருந்தாலும் அவனின் அருளை முழுமையாக அறிந்தவர் யாரும் இல்லை.

சேயினும் நல்லன் அணியன் – சேய் – குழந்தை (அ) தொலைவு. இதனை குழந்தையைப் போன்ற நல்ல குணாதிசயங்களை உடையவன், கொண்டாடப் படுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். நாத்திகம் பேசி விலகி செல்வோருக்கும் நன்மையை மட்டுமே தருபவன், நெருங்கிச் சென்று அருள்பவன்.

நல் அன்பர்க்கு தாயினும் நல்லன் – தன் மீது அன்புடயோர்க்கு தாயைப் போன்று பாசம் கொண்டவன்.

தாழ் சடையோனே – தாழ்ந்த சடையை உடைய சிவன்.

Advertisements
Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 7


முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாயுளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே

முன்னை ஒப்பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் – முதலில் தோன்றியவர் என்று கருதத்தக்க மும்மூர்த்திகளுக்கும் மூத்தவன்.

தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் – தனக்கு இணையாக எதையும் கூற இயலாதவன்

தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன் – தன்னை அப்பா என்றழைப்பவர்க்கு தந்தையாய் இருந்து நல்வழி காட்டுபவன். சைவ சித்தாந்தத்தில் நான்கு மார்க்கங்கள் வழங்கப்படுகின்றன. அவை பின்வருமாறு

தாச மார்க்கம் – திருநாவுக்கரசர் – இறைவனை தலைவனாகவும், தன்னை அடிமையாகவும் எண்ணுதல்.

புத்திர மார்க்கம் – திருஞானசம்பந்தர் – இறைவனை தந்தையாகவும், தன்னை மகனாகவும் பாவித்தல்

சஹஜ மார்க்கம் – சுந்தரர் – இறைவனை தன் நண்பனாக காணுதல்

சன்மார்க்கம் – மாணிக்கவாசகர் – தன்னுள் இறைவனை உணர்தல்.

இறைவனை தன்னை தந்தையாக எண்ணுபவர்க்கு, தந்தையாய் இருந்து ஞானமளிப்பவன்.

பொன்னை ஒப்பாகின்ற போதகத்தானே – சிலர் இதனை “தங்கம் போன்ற ஒளிவீசும் மேனியை உடையவன், என்றும் இளமையாக உள்ளவன்” என்று பொருள் கொள்வர். ஆனால் இதன் மெய்ப்பொருள் யாதெனின் இறைவன் பொன்னைப்போன்ற ஒளி வீசும் போதின் அகத்தில் உள்ளவன். அதாவது பொன் போல் ஒளி வீசும் தாமரையகிய சஹஸ்ராரத்தில் இருப்பவன்.

Posted in திருமந்திரம் | Tagged , , | 3 Comments

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 6


அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே

அவனை ஒழிய அமரரும் இல்லை – இறைவனைத் தவிர இறப்பற்றோர் ஒருவரும் இல்லை. இறைவனன்றி விண்ணுலகில் வாழும் தேவர்களும் இல்லை.

அவனன்றி செய்யும் அருந்தவம் இல்லை – இறைவனின் அருளன்றி செய்யும் தவங்கள் இல்லை. இறைவன் அருள் இருந்தால் மட்டுமே அவனை வணங்கவும் முடியும், இல்லையேல் ஒரு அணுவையும் அசைக்க இயலாது.

அவனன்றி மூவரால் ஆவது ஒன்றில்லை – இறைவனின் அருள் இல்லையேல் அயன், மால் உருத்திரர்களாலும் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் தொழில்களை ஆற்ற இயலாது.

அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே – இறைவனின் அருள் இன்றி முக்தி அடைவதற்கான வழியை அறிய இயலாது.

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 5


சிவனோடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனோடொப் பாரிங்கு யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே

சிவனோடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை – சிவனுக்கு ஒப்பாகக் கூறும் தெய்வம் எங்கு தேடினாலும் காண இயலாது. மாலும் அயனும் அடிமுடி தேடிய உண்மை அனைவரும் அறிந்ததே. ஒரு பொருளின் ஒரு பகுதி, அந்தப் பொருளை விட பெரியதாக முடியாது. அது போல், தெய்வங்கள் என்று வணங்கும் அனைவரும் சிவனுக்குள் அடக்கம். எனவே சிவனுக்கு இணையான தெய்வம் எங்குமே இல்லை.

அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை – சிவனுக்கு ஒப்பான மனிதர்களும் இல்லை. தேவர்களும், முனிவர்களும், தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் சித்து வேலை காட்டும் போலிச் சாமியார்களும் இறைவனுக்கு ஈடாகார்.

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் – இறைவன் இவ்வுலகிற்கு எல்லாம் அப்பாற்பட்ட அண்ட வெளியில் நிறைந்திருக்கும் பேரொளியாய் விளங்குகிறான்.

தவனச் சடைமுடித் தாமரையானே – வெண்மை பொருந்திய தாமரை போன்ற சடைமுடி உடையவனே.

இதன் மறைபொருள் யாதெனின், சஹஸ்ரார சக்கரமானது வெண்மையான ஒளி பொருந்திய ஆயிரம் இதழ் கொண்ட தாமரையைப் போன்றது. இறைவன் இச்சக்கரத்தில் குடி கொண்டுள்ளான்.

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 4


அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் துமிர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே

அகலிடத்தார் மெய்யை – அகலிடம் ஆகிய இவ்வுலகத்து உயிர்களின் உள்ளிருக்கும் உண்மைப் பரம்பொருளை.

உயிர் என்பது என்ன? அது உடலில் எங்கு உள்ளது? நம் உடலில் உயிராக, பிராண சக்தியாக விளங்குபவன் இறைவனே. உயிர்ச் சக்தி நம் உடலில் பாயும் வரையே நாம் மனிதர். இல்லையென்றால் நைட்ரஜனும் கால்சியமும் ஹைட்ரஜனும் கலந்த கல்லுக்கும், நமக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அண்டத்து வித்தை – பரந்து விரிந்து கொண்டிருக்கும், பிரபஞ்சத்தை தன்னிடமிருந்தே தோற்றுவித்தவன்.

இந்த பிரபஞ்சத்தை எடுத்துக் கொள்வோம். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று அனைத்தையும் தோற்றுவித்து, அவற்றை அந்தரத்திலே நிறுத்தி இயக்கிக் கொண்டிருப்பவனும் இறைவனே.

புகலிடத்து என்றனைப் போத விட்டானை – என்னை என் இருப்பிடத்திற்கே மீண்டும் சேர்த்தவனை

எல்லா உயிர்களும் மாயையின் பிடியால், பல பிறவிகளை எடுக்கின்றன. ஆனால் திருமூலருக்கு உடம்பை அழியாமல் காக்கும் இரகசியத்தையும், பிறப்பு இறப்பற்ற துரிய நிலையும் தந்து அடைக்கலம் அளித்தவன் இறைவன்.

பகலிடத்தும் இரவும் பணிந்தேத்தி – நேரம் காலமெல்லாம் கடந்து பணிந்து வணங்கி

திருமூலர் ஓராண்டு தவம் செய்து ஒரு பாடலை அளித்து, 3000 ஆண்டுகள் அருந்தவத்தால் திருமந்திரத்தை அருளியுள்ளார். எனவே அவர் பகல் இரவு என்று பாராது இறை உணர்வோடு வாழ்ந்தவர் என்பதை உணரலாம். வழிபாடு என்பது தினமும் காலை அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ செய்யப்பட வேண்டிய கடமை அல்ல. அதுவே வாழ்க்கை முறையாக வேண்டும்.

இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே – இப்புவியிலேயே அறியாமை இருள் நீங்கி இருக்கிறேன்.

இப்பாடலின் மறை பொருள் பின்வருமாறு.

இப்பிரபஞ்சத்தின் சக்தியாகவும், நம் உடலில் குண்டலினி சக்தியாகவும் விளங்கும் இறைவனை, இடகலை, பிங்கலை வழியே செல்லும் பிராணனை சுழுமுனை மார்க்கமாக மேலெழுப்ப, புருவமத்தியில் அருட்பெருஞ்சோதி தோன்றி அறியாமை இருளை அழிக்கும் என்பதேயாகும்.

Posted in திருமந்திரம் | Tagged , , | 1 Comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 3


ஒக்கனின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென் றேத்திடு நாதனை நாடொறும்
பக்கநின் றாரறி யாத பரமனை
புக்குநின் றுன்னியான் போற்றிசெய் வேனே

ஒக்க நின்றானை – யாதுமாகி நின்ற ஒருவனை.

இறைவன் ஒருவனே என்பதே அனைத்து சமயங்களின் மையக் கருத்தாகும். சைவர்கள் இறைவனை சிவன் என்றும், வைணவர்கள் விஷ்ணு என்றும், இஸ்லாமியர்கள் அல்லா என்றும், கிறிஸ்தவர்கள் பிதா என்றும், பௌத்தர்கள் புத்தர் என்றும், விஞ்ஞானிகள் இயற்கைச் சக்தி என்றும் வழங்கி வந்தாலும் இறைவன் ஒன்றே. மலையின் உச்சியை அடைய ஆயிரம் வழி இருக்கலாம், ஆனால் மலை உச்சி ஒன்றாகத் தான் இருக்க முடியும். அது போன்றே இறைவனை அடைய பல மார்க்கங்கள் இருந்தாலும் இறைவன் ஒருவனே.

உலப்பிலி தேவர்கள் நக்கன் என்றேத்திடும் நாதனை – மரணமில்லாத தேவர்களும் தூய்மையானவன் என்று பணியும் இறைவனை. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் அனைத்து உயிர்களையும் சூழ்ந்து இருக்கும். ஆனால் இறைவன் மும்மலம் கடந்தவன்.

நாடொறும் பக்க நின்றார் அறியாத பரமனை – இறைவனின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செயலாற்றும் பிரம்மர்களும், மால்களும், உருத்திரர்களும், மகேச்வரர்களும், சதாசிவர்களும் கூட, எப்போதும் இறைவன் அருகிலேயே இருந்த போதிலும் அவரை முழுதாக அறிந்திலர்.

புக்கு நின்றுன்னி யான் போற்றி செய்தேனே – அவனே பிரபஞ்சம் என்பதால் அவனுள்ளே அடங்கி நின்று, அவனையே மனதில் இருத்திப் போற்றுகின்றேன்.

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

பாயிரம் – கடவுள் வாழ்த்து – 2


போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை – அனைத்து உயிர்களும் போற்றிப் புகழும், நிலைத்து விளங்கும் தூயவனை

நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கும் நாதனை – கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளுக்கும், அதாவது பாரபட்சமின்றி அனைவருக்கும் அருளும் அன்னை சக்திக்கும் தலைவனை

மேற்றிசைக்குள் தென் திசைக்கொரு வேந்தனாங் – திசைகளை எட்டாகப் பிரித்து, ஒவ்வொரு திசைக்கும் ஒருவரை தலைவனாகக் கூறுவர். அவை பின் வருமாறு.

கிழக்கு – இந்திரன்
தென்கிழக்கு – அக்னி
தெற்கு – எமன்
தென்மேற்கு – நிருதி
மேற்கு – வருணன்
வடமேற்கு – வாயு
வடக்கு – குபேரன்
வடகிழக்கு – ஈசான்யன்

இவற்றுள் தென் திசையின் வேந்தன் எமன்.

கூற்றுதைத்தானை யான் கூறுகின்றேனே – தன் பக்தனுக்காக காலனையே சம்காரஞ் செய்தவனை நான் வணங்குகின்றேனே.

மார்க்கண்டேயருக்கு பதினாறு வயதில் மரணம் நிகழும் என்பது விதி. ஆனால் காலன் விரட்டி வருகையில் மார்க்கண்டேயன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரிடம் அடைக்கலம் அடைந்தார். இறைவன் காலனை உதைத்து, மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு இளமையையும் அளித்தார்.

இறைவனிடம் தன்னையே அற்பணித்தால் அவர் மரணத்திலிருந்தும் காப்பார்.

Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment