பாயிரம் – கடவுள் வாழ்த்து – 1


ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தானைந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே

ஒன்றவன் தானே – கடவுள் ஒருவனே என்று திருமூலர் கூறுகிறார்.
விஞ்ஞான பார்வையுடன் பார்த்தால், இப்பிரபஞ்சமானது சக்தியிலிருந்து துகள்களும், அதன் எதிர் துகள்களும் தோன்றி, அதன் பல்வேறு சேர்க்கையால் அனைத்தும் தோன்றிற்று என்பர்.

ஆக இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமாகிய அளப்பதர்கரிய அச்சக்தியே கடவுள் ஆவர். இக்கடவுளே வள்ளலார் கூறும் அருட்பெருஞ்சோதி. மாயையின் மயக்கத்தில் பலவாகத் தோன்றிடினும், கடவுள் ஒன்றே என்பதையே தன்னுடைய பாடலால் வலியுறுத்துகிறார்.

இரண்டவன் இன்னருள் – அவன் அருளானது, இக அருள், பர அருள் என இரண்டு வகைப்படும். இக அருளானது, இப்புவியில் இப்பொழுதே அளிக்கப்படுவது. அவை அறம், பொருள் மற்றும் இன்பமாகும். பர அருளானது, அவரவர் தோன்றிய கடமையை, எப்போதும் இறை சிந்தையோடு நிறைவேற்றிய பின் பெரும் வீடாகும்.

நின்றனன் மூன்றினுள் – இவ்வரி நிறைந்த பொருளுடையது. மும்மூர்த்திகலாகிய பிரம்மன், மால், உருத்திரன் ஆகியோரில் ஒருவன் என்பது ஒரு பொருள். இப்பிரபஞ்சம் தோன்றிய இறந்த காலம் தொடங்கி, இக்கணம் ஆகிய நிகழ் காலம் நின்று, அழிவில்லாத எதிர்காலத்திலும் இருப்பவன் என்பது மற்றொரு பொருள். மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் சூழ்ந்த போதிலும், அழியாது நின்றவன்.

நான்குணர்ந்தான் -நான்கு வேதங்கள் ஆகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பவை உணர்ந்தவன். சாக்கிரம், சுழுத்தி, சொப்பனம், துரியம் என்ற நான்கு நிலைகளையும் உணர்ந்தவன் என்பது இதன் சூக்குமப் பொருளாகும்.

ஐந்து வென்றனன் -மேலே கூறிய நான்கு நிலைகளையும் கடந்த துரியாதீத நிலையை வென்றவன். ஐந்து புலன்களாகிய கண், செவி, வாய், மூக்கு, உடல் என்பவையை வென்றவன். ஐம்பூதங்கலாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை வென்றவன்.

ஐம்பூதம் – விஞ்ஞானப் பார்வையும் மெய்ஞ்ஞானப் பார்வையும்.
அறிவியலில் பொருளானது திடம், திரவம் மற்றும் வாயு என்ற மூன்று நிலைகளில் உள்ளதாகவே கூறி வந்தனர். பின்னர் பிழம்பு என்னும் பிளாஸ்மா நிலையை கண்டனர். அவர்கள் ஆகாயம் என்னும் வெறுமையை இப்பொழுது தான் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள். அனால் சைவர்களோ, பொருள் ஐந்து நிலைகளில் உள்ளது என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கண்டவர்கள்.
நிலம் – திட நிலை
நீர் – திரவ நிலை
காற்று – வாயு நிலை
நெருப்பு – பிழம்பு நிலை
ஆகாயம் – வெறுமை நிலை

ஆறு விரிந்தனன் -உடலில் ஆறு ஆதாரமாய் விளங்கும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய சக்திச் சக்கரங்களாக விரிந்தவன். ஆதியும் அந்தமும் இல்லாத போதிலும், நாதாந்தம், கலாந்தம், வேதாந்தம், போதாந்தம், சித்தாந்தம், யோகாந்தம் ஆகத் தோன்றுபவன்.

எழும்பர்ச் சென்றனன் – ஆறு சக்கரங்களையும் கடந்து ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரார சக்கரத்தில் நின்றவன். தோல், அஸ்தி, தசை, மூளை, சுக்கிலம், இரத்தம், இரசம் என்னும் ஏழு தாதுக்களாலான உடலை கடந்து சென்றவன்.

தானிருந் தானுணர்ந் தெட்டே -ஐம்பூதங்களும், ஞாயிறு, திங்கள் மற்றும் உயிர் ஆகிய எட்டையும் உணர்ந்து, தானே அந்த எட்டிலும் நிறைந்து உள்ளான்.

 

Advertisements
Posted in திருமந்திரம் | Tagged , , | Leave a comment

விநாயகர் காப்பு


ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

ஐந்து கரத்தனை – ஐந்து கைகளை உடையவனை

சிவ வடிவமாக ஐந்து கைகளால் ஐந்தொழில்களை செய்பவர் கணபதி.

எழுத்தாணி ஏந்திய கரம் படைத்தல் தொழிலையும், கொழுக்கட்டை ஏந்திய கரம் காத்தலையும், அங்குசக் கரம் அழித்தலையும், பாசக் கரம் மறைத்தலையும், அமுதக் கலசமேந்திய துதிக்கை அருளலையும் செய்கின்றன.

யானை முகத்தனை – யானையின் முகம் பொருந்தியவனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

இந்து – சந்திரன். எயிறு – தந்தம்.

அதாவது இளம் சந்திரனை போன்ற வளைந்த தந்தம் உடையவனை.

நந்தி மகன்றனை –

திருமூலர் நந்தியின் சீடர். அவர் தனது குருவையே சிவனாகக் கருதியவர். எனவே சிவனின் மகன் என்பதையே நந்தி மகன்றனை என்று பாடினார்.

ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து

ஞானம் என்னும் இளம் சுடரை சிந்தையில் நிறுத்தி, அறியாமை இருளை விரட்டி.

அடி போற்றுகின்றேனே

இறைவனின் திருவடிகளை போற்றுகின்றேன்.

Posted in திருமந்திரம் | Leave a comment